Friday, April 26, 2013

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர் !

தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள் என முத்திரமாகவும், யாப்பும் அணியும் சேர்ந்து ஐந்திரமாகவும் பிரித்து விரித்துக் கூறப்படுகின்றது. சேக்கிழார்க்கும் சுந்தரமூர்த்தி நாயனார்க்கும் பெரியபுராணத்திற்கும் திருத்தொண்டத் தொகைக்கும் முதற்சொல்லை சிவபிரானே எடுத்துக் கொடுத்தார் என்பர்.
திருவள்ளுவர் குறளுக்கு முதற்சொல்லை எடுத்துக் கொடுத்தவர் தொல்காப்பியரே ஆவார். தொல்காப்பியர், "எழுத்தெனப்படும் அகரமுதல னகரவிறுவாய் முப்பஃது என்ப' என்கின்றார். இந்த இலக்கண நெறியைத் திருவள்ளுவர் தம் முதற் குறளிலேயே "அகர முதல எழுத்தெல்லாம்' என்று எடுத்துக்கூறி, அகரத்தின் முதன்மையை - தலைமையைப் புலப்படுத்தி, தனக்குவமையில்லாத கடவுளுக்கு உவமையாக்கிப் புகழ்ந்திருக்கின்றார். இதனால், திருவள்ளுவர் இலக்கண நெறிக்கு எத்துணை மதிப்புத் தந்துள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும், "னகரவிறுவாய்' எனத் தொல்காப்பியர் கூறிய இறுதியெழுத்தாகிய னகரத்தைத் தம் நூலின் இறுதிக் குறளில் "கூடி முயங்கப்பெறின்' எனக் கூறி அதனை இறுதியெழுத்தாகவே அமைத்துக் காட்டியுள்ள பெருமை நினைத்தொறும் வியக்கத்தகும் நீர்மையதாகும்'.

குறிப்பு: "தமிழாகரர்' பேராசிரியர் செ.வேங்கடராமனின் "திறனாய்வுச் சிந்தினைகள்' என்ற நூலில், "திருக்குறளில் இலக்கண நெறி' என்ற கட்டுரையிலிருந்து...

(நன்றி - தமிழ்மணி) 

சகம் குளிர



அகம் குளிர.............சகம் குளிர...................
(விருப்பம் - வேதாந்தகவியோகி நாகசுந்தரம்)
 
கூழுக்கு உப்பில்லை என்பாருக்கும்
பாலுக்கு சக்கரை இல்லை என்பாருக்கும்
விசனம் ஒன்றே என்பார்கள் !
அதனால்தான் சொல்லுகின்றேன்
இருப்பதை வைத்து
இன்பமாக இருக்கவேண்டும் !
இல்லாததை நினைத்து
ஏக்கம் ஏனோ ?
வேண்டும் என்று நினைத்தால்தான்
வேகமாக முன்னேற்றம் எனலாம் !
வேண்டும் என்ற வேட்கை இங்கே
வேண்டும்தான் என்றாலும்
வேண்டுதற்கும் ஓர் எல்லை உண்டு !
முன்பு
மின்விளக்கு கூட இல்லா கிராமத்தில்
தெருவிளக்கில் தானமர்ந்து
தீவிரமாய் படித்தோர்கள் பலர் உண்டு !
இன்றோ
ஏஸி அறையினிலே
ஏகாந்தமாக தானமர்ந்து
கணிணி திரையினிலே
காண்கின்றோம் உலகினையே !
முன்னேற்றம்தான் !
இல்லையென்று கூறவில்லை !
ஆனால்
இன்று
கணிணி இல்லையென்றால்
காரியம் நடக்கவில்லை !
மின் விசிறி போதவில்லை !
ஏஸிக்கு ஏங்குகிறோம் !
குளோபல் வார்மிங்கை
காசு கொடுத்து ஏற்றுகிறோம் !
ஓர் தத்துவம் சொல்லுகின்றேன் !
தயவுடன் கேட்டிடுவீர் !
சூரியன் வெம்மையுடன்
சூட்டினை தருகின்றான் !
பயிர் விளைய அவன் வேண்டும் !
உணவுக்கு உயிர் அவன்தான் !
ஆனால் அளவுக்கு மீறி
அடிக்கின்ற வெயிலேதான்
அந்த பயிர் உயிரை
பறிக்கின்ற விந்தை அறிவோம் !
அதுபோல்
மின்சாரம் வேண்டும்தான் !
அளவோடு அது இருந்தால்
உயிர் வாழ்க்கை நாம் வாழ்வோம் !
இன்பம் பல உண்டு !
ஆனால் இன்றோ
மின்சாரத் தேவை நிறைய !
மின்சார விசிறியில்தான்
மிதமாக தொடங்கியது !
கிழங்கு காய்கறிகள்
வேகவைக்க ஓவன்கள் !
குளிர்ந்த தண்ணீருக்கு
குளிர்பதன பெட்டி பலவும் !
சாட்டிங் செய்திடவோ
லாப்டாப் பல உண்டு !
வெப்ப நாட்களிலே
வேண்டும் ஏஸி அறைகள் !
குளிர்காலம் என்றாலோ
ரூம் ஹீட்டரும் கெய்ஸரும் !
வீட்டில் மட்டுமல்ல !
அலுவலக அறைகள் கூட
இங்கே அதிகமாக குளிர வைக்கும் !
சூரிய வெப்பம் தன்னை
மேலும் சூடாய் ஆக்க
சுளுவாக பல பல உண்டு !
குளோபல் வார்மிங் தன்னை
குளிராக்க ஒரு வழி உண்டு !
சூரிய வெப்பம் தன்னை
தன்னிடம் ஈர்த்துக்கொண்டு
தரணியை குளிர வைக்கும்
தன்மை அந்த நிலவுக்குண்டு !
அதைப்போல்
நாமும் மாற வேண்டும் !
பெரியோரின் மனதைப்போல
குளிர்ச்சியது மனதில் வேண்டும் !
மனமது குளிர்ச்சியானால்
மேதினி குளிராய் ஆகும் !
மனமது குளிர வேண்டின்
சினமதை குறைக்க வேண்டும் !
சினமது குறைய வேண்டின்
சிக்கனம் வீட்டில் வேண்டும் !
பானையின் சமைக்க இங்கே
பக்குவம் சொல்லவில்லை !
மின்சாரம் சார்ந்த நிலையை
மெதுவாக குறைக்க வேண்டும் !
வீடு குளிர ஏஸி வைத்தோம் !
பூமி குளிர என்ன செய்தோம் ?
அகம் குளிர பெட்டி வைத்தோம் !
சகம் குளிர சாத்திரம் செய்வோம் !
சுகமாக வாழ வேண்டும் !
இல்லையென்று சொல்லவில்லை !
ஆனால் வரும்
சந்ததியும் சுகத்தை விரும்பும் !
அதற்கு
சங்கதிதான் இந்த கவிதை !
என் மனம் குளிர வைத்திடுங்கள் !
தொலைக்காட்சி தொடரின் ஒன்றை
தொலைத்துவிட்டு மூடிடுங்கள் !
எந்தன் மனம் குளிர்ந்து போகும் !
அதைப்போல்
இந்த மேதினியும் குளிர்ந்து போகும் !
பெட்டியும் பலநாள் உழைக்கும் !
புரிந்திருக்கும் உங்கள் மனதில் !
பகட்டான வாழ்க்கை வேண்டாம் !
திகட்டிவிடும் இனிமேல் சொன்னால் !
சுகமாக வாழ்ந்திடுவோம் !
சுந்தரி அவள் துணை புரிவாள் !
ஓம் சக்தி !